மர்மம் என்ன?
சசிகலாவையும் அவரது கோஷ்டியையும் கூண்டோடு கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியேற்றி கூடா நட்பை ஒருவாறாக முடித்துக்கொண்டதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நமது உள்ளம் நிறைந்த பாராட்டுகள்.அதே நேரத்தில் சில கேள்விகள் மனத்தில் எழுந்து அலைக்கழிக்கின்றன.
சசிகலாவுக்கும் முதல்வருக்கும் உள்ளது 30 வருட நட்பு என்று கூறப்படுகிறது.ஒரு சாதாரண video கடை வைத்திருந்தவருடன் முதல்வருக்கு இவ்வளவு நெருக்கம் எப்படி ஏற்பட்டது? அதுவும் தன் வீட்டிலேயே நிரந்தரமாக இடம் கொடுக்கும் அளவுக்கு நட்பு எப்படி முற்றியது?
இதுவரை பலமுறை அவர்களது நட்பு முறிவடைந்து பின்னர் மீண்டும் சமாதானம் ஏற்பட்டு முதல்வர் சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே சந்தேகத்திற்கிடமளிக்கும் நடவடிக்கைகளில் சசிகலா குழுவினர் ஏற்கனவே பலமுறை ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருக்க நிறைந்த அறிவாற்றலுக்கும் முதிர்ச்சிக்கும் பெயர் பெற்ற முதல்வர் தனது ஆருயிர்த்தோழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்காமல் விட்டது எப்படி?
முதல்வர் வீட்டிலேயே இருந்து கொண்டு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஓர் இணை அதிகார மையத்தையே உருவாக்கும் அளவுக்கு தோழியை நம்பியது ஏன்?
அமைச்சர்கள்,அதிகாரிகள் நியமனத்தில் தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு பதவிகள் பெற்றுத் தந்ததாகவும் டெண்டர்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் முதல்வராலல்லவோ பரிந்துரைக்கப்படுகிறது அல்லது செய்யப்படுகிறது? அவ்வாறு நியமனத்திலோ பரிந்துரைகளிலோ ஒப்பிடும்போது சம்பந்தப்பட்ட நபரின் தகுதிகளைப்பற்றி அறியாமலா முதல்வர் ஒப்பிட்டிருப்பார்?
சசிகலா கோஷ்டியினரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளைப்பற்றி சிறிது காலமாகவே செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் கசிந்து வருகின்றன.அப்படியிருக்க அதே வீட்டில் இருக்கும் முதல்வருக்கு இந்த நடவடிக்கைகள் தெரியாதிருந்தது எப்படி?
அப்படி அதைப்பற்றி அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் முன்னதாகவே நடவடிக்கை எடுக்காதிருந்ததற்கும் இப்போது திடீர் என்று நடவடிக்கை எடுத்திருப்பதற்கும் உள்ள பின்னணி என்ன
No comments:
Post a Comment